Sonntag, 25. Januar 2009

உயிருறிஞ்சும் மண்ணுக்கு...

மகா பெரிய ஒழுங்கு:

உயிருறிஞ்சும் மண்ணுக்கு!

(புனைவு)


விபரஞ் சொல்ல முனைந்து...


சங்கொலியும்,கொடியும் வான் நோக்கி...

தவில்களில் தடம் புரண்ட விரல்களின் நர்த்தனத்துள் நாதஸ்வரம் ஓய்ந்தே போனதென்றால் அப்பப்பக் காதும் அதிர்ந்ததாக எடுத்தாண்டு கொள்(ல்)க!

அடாத மழை பொழியுங்கால் விடாத நாடகம் நடாத்தியே காட்டும் ஜில் ஜில் ராஜபக்ஷ தியேட்டர் கம்பனி,நடுவினில் கோமாளிக் குஞ்சுகளாகக் கொக்குத் தலையில் வெண்ணை தடவிப்..."பேச்சு வார்த்தை"பாடம் நடாத்த தென்கோடிப் பேரரசர் தெவிட்டாத டக்ளஸ் மாத்தையா.கிழக்குத் தமிழ் செழித்தோங்க ஜனநாயகப் பசளையிடும் சின்ன மண்ணா-பெரியமண்ணா சிறப்பு அதிரடிப் படைகள் திரண்ட வெண்ணையில் முகத்தைப் புதைத்தபடி...இழவு வீட்டில் பெயர்ப் பலகைத் தட்டியை நிறுத்திய ஒரு கணப் பொழுதில் ஓய்ந்தது யுத்தம்,ஒழிந்தது பஞ்சம் கிழக்குக் குடிசைகளுக்குள்.

விதியே விதியே வினை முடிப்பாயோ?விண்ணஞ்சும் அதிர்வேட்டுப் போர்முழக்கும் விதித்தப் பல கட்டளைகளில் காலம் அறுந்து சிதைந்தது,சிரித்த தந்தையின் உணர்வுக்குள் சில்லறைகள் கல்லறை அமைக்க,கடுகு தேடிய தாயோ"மாவீரர் மரணம்"அற்ற வீடுகளும் இருக்கக் கண்டாள்.மடியிலே சுமைகொண்ட புலம் ஐந்தும் வதை செய்யப் புக்கினாள் தேசியக் கோட்டை.


கோட்டை(கொட்டை)யடியில்:



"இராணுவம் தேசியக் கொடிக்கு மட்டும் மரியாதை செய்யும் பட்சத்தில் தனி நபரின் மரணம் எதையோ உரைத்துச் சொல்கிறது".-காப்டன் கூறிக்கொணடான்


"ஒரு இராணுவப் படையணி நகரொன்றை மட்டும் பிடித்து எதிரியை வேட்டையாடும்போது இவ்வூழ்வினையுள் ஏதோவொன்று நிலவுகிறது."-ஜெனரல் கூறிக்கொண்டான்.


தேசாபிமானி கூறினார்:-" இறுதி மனிதன் இருக்கும்வரை நாம் போராடிச் சாகவேண்டுமானால்,இச் சாவு தாய்நாட்டிற்காக மட்டும் உபயோகமாக வரவேண்டும்".


தூரநோக்குடைய பண்பாட்டு வரலாற்றியலாளர் தூரப்பார்த்துவிட்டுக் கூறுகின்றார்:" எப்போதாவது இரு நாடுகள் -இரு இனங்கள் சுயமாகச் சிதைவுற்றுப்போனால்-அவை வீணான காரணங்களுக்காகச் சிதைவுற்றுப்போகவில்லை.உலகம் தன்னைத் தானே ஞாபகப் படுத்திக் கொள்வதும்,புதிதாய் மலர்வதும்,மேல்நோக்கி வளர்வதும் வேண்டும்.கூடவே தனது இரத்தக்கறை படிந்த மனித வரலாற்றை கழுவியாகவேண்டும்".


முதிர்ந்த புத்திஜீவி தனது குளிர்ந்த விரல்களால் நீண்ட தாடியைத் தடவியபடி:-" குழப்பம் நிறைந்த பழைய முதலாளியத்தை- நவகொலனித்துவத்தை எடுப்போம்,உலகம் பூராக மீளவும் இவர்களால் குற்றச் செயல்கள் செய்ய எப்படிச் சாத்தியமாச்சு?தோட்டத்துக்குப் பசளையிடுவதுபோன்று மனிதம் பலியாக்கப் பட்டு-கொலையாக்கப்பட்ட பூமிப் பகுதியை மூடி மறைத்து, காத்திராது தங்கள் அறுவடையை செழிப்பாக்கி வளர்த்தெடுக்கிறார்கள்.கூடவே பாசாங்கு விளையாட்டுப் போட்டிகளால் வேறு மக்களைச் சுரண்டியும்,அவர்கள் மூளையைச் சலவை செய்தும்...!" மீளவும் தலையைச் சொறிந்தார்,வானத்தைப் பார்த்தபடி.


கடவுள் கூறிக்கொண்டார்:-

" எனது சூரியக் குடும்பம் இருபத்தி நான்காவதுக்கு,அரேபியும்-ஆங்கிலமும்-மூத்த
குடித் தமிழும்... தொலைந்தது இந்தப் பூமிக்கிரகம்.இது சௌபாக்கியமான அர்த்தம்
நிறைந்ததாக இப்போது தோன்றுகிறது. சிலவேளை இப்படித் தொலைந்தது நன்மையே! என்
விருப்பத்தின் பொருட்டு எப்போதாவது இந்த எல்லாச் சூரியகுடும்பத்தையும் பிரபஞ்ச
ஒழுங்குக்கு பொருந்தி வரக்கூடியதாக மாற்றிக்கொள்ள..."

ஆத்திரப்பட்டுக்கொண்டார்.

"என் பிள்ளைகள் பத்திரமாக மீளவும் வீடு திரும்புவார்களென்றால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடலாம்".- வன்னியிலிருந்து திருமதி.சுப்ரமணியம் கூறிக்கொண்டார்.

ஆட்கொள்ளல் கண்டு அரண்ட பொழுது:

"டொலர்களில் பரிமாற்றும் மேற்குலகில் செய்வததென்றால் பிடித்தசிறார் வீடு மீள்வாரென" தமிழ் நியாயம் சொல்ல நிலவு, அடிவானில் அமிழ்ந்து வானம் சிவந்தது.


பிற்குறிப்பு:

எனது கைகளிலிருந்த வறுத்த வேர்க்கடலை வாயிலிருந்து ஏதோவொரு அமிலமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இலங்கையரசு தமிழ் மண்ணை மட்டுமல்ல அழித்து வருகிறது என்ற தொடரில்...மக்களை,குடும்பத்தலைவரை,சிறார்களை,பெண்களைக்குதறி...பத்திரிகையாளரைக் கைதும் செய்து கஷ்ரடியில் வைத்துக் கொல்வதென்றும் புலிகள் சர்வதேசத்துகுச் சொல்லும் துண்டுப் பிரசும் தொழிலாளர் தினத்தில் தோன்றக் கண்டார் கையிலை மலையில்.

வாஸ்த்தவம்தான்!,வாடிய பயிரைக் கண்டபோது வாடியவர்கள் "அவர்கள்"மட்டுமல்ல நம்ம தேசத்துச் சிங்கள-தமிழ் அரசுகளும்தான்.

"தாங்காதம்மா தாங்காது,தாகம் தீர்ந்து போகாதம்மா போகாது!"தம்பிக்குத் தங்கைக்கு பெட்டிக்குள்ள பெரு வீரம்,பேரென்னவோ"பெரியாருக்கு"-போருக்குள்ளே
புகழுண்டு,ஊருக்குள்ளே இழவுண்டு!

வட்டக்(நோட்டு) கனவு கொட்டக் கொட்ட வடக்கு மறுத்துக் கிழக்கைப் பிரி,வலிந்த பக்ஷ வாரித்தந்த "தீர்வை"மாகணங்களுக்குள் கண்டபோது சபைக் காச்சல் ஏறிய டிகிரியில் சொக்கிய குருதி நினைவைப்பறிக்க மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...

ப.வி.ஸ்ரீரங்கன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen